அம்பிகை வெண்ணெயால் கோட்டை அமைத்து இறைவனை வழிபட்டதால் வெண்ணெய் நல்லூர் என்று பெயர் பெற்றது. அம்பிகையின் திருவருள் பெற்றதால் கோயில் அமைந்துள்ள இடம் அருட்டுறை என்று வழங்கப்படுகிறது. மூலவர் பெரிய வடிவிலான லிங்கமூர்த்தி. மூலவரின் பின்புறம் இறைவனின் திருமணக் கோலக் காட்சி உள்ளது.
தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகப்பெருமான் மயில் மீது நடனம் புரிந்த சிறப்புமிக்க தலம். வேதம் மூங்கில் வடிவம் எடுத்து வழிபட்ட தலம். எனவே, இங்கு தலவிருட்சம் மூங்கில். தருமதேவதை சிவபெருமானை பூசை செய்து கொடியாகவும், விடைவாகனமாகவும் மாறிய தலம்.
சிவபெருமான் முதிய அந்தணராக வந்து ஓலை கொடுத்து சுந்தரரை தடுத்தாட்கொண்ட தலம். இறைவனின் மரத்தினாலான பாதச் சுவடுகள் கோயிலில் உள்ளது. வழக்கு வென்ற நூற்றுக்கால் மண்டபம் கோபுர வாயிலுக்கு அருகில் உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது முதல் பதிகமான 'பித்தா பிறைசூடி' பாடிய திருத்தலம்.
சந்தானக் குரவர்களுள் ஒருவரான மெய்கண்டாரின் ஜீவசமாதி வடக்கு வீதியின் கோடியில் கடைவீதியிலிருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊர்.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தலத்து முருகப்பெருமானைப் பாயுள்ளார். காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். |